LoveTruyen.Me

Slug

41 மகிழ்ச்சி

"தாம் கூறியது போலவே செய்கிறேன்." என்றாள் எழிலரசி.

"நினைவிருக்கட்டும். இது, நாம் வகுத்த திட்டம் என்பது தெரியாமல் இயல்பாய் இருக்க வேண்டும். இந்த விடயம் நேரடியாக காஞ்சனமாலையை சென்றடையாமல் வேறு யார் மூலமாகவோ தான் அவளிடம் சென்று சேர வேண்டும்.  அப்பொழுது தான் அவளுக்கு நம் மீது ஐயம் தோன்றாது."

"அப்படியே ஆகட்டும்."

தனது அறைக்கு வந்த எழிலரசி, ஒரு மெல்லிய பட்டு துணியை எடுத்து, செம்பருத்தி சாறை கொண்டு தன்மயாவின் திட்டத்தை அதில் விலாவரியாய் எழுதினாள். அது நன்றாக காயும் வரை பொறுத்திருந்தாள். அதை சுருளாக சுருட்டி, அதை ஒரு கையடக்க வெள்ளி உருளையில் வைத்து மூடினாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே வந்த போது, அரசரும், அரசியும் மெய்தீர்த்தரை வழி அனுப்புவதை கவனித்தாள்.

அவர் இவ்வளவு விரைவாய் அங்கிருந்து கிளம்புவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அவர்களை நோக்கி விரைந்தாள். அப்பொழுது காஞ்சனமாலையின் அந்தரங்க தோழியான உமையாள், அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்து செல்வதை பார்த்து நமுட்டு புன்னகை சிந்தினாள். தன்மயாவின் திட்டத்தை செயல்படுத்த உமையாளை விட சிறந்த ஒருவர் கிடைக்க மாட்டார்கள். அவர்களது திட்டம், காஞ்சனமாலையை நேரடியாக சென்று சேரக்கூடாது என்று தன்மயா கூறினாள் அல்லவா? அதை காஞ்சனமாலையிடம் கொண்டு செல்ல ஏற்றவள் உமையாள் தான்.

எழிலரசி அவர்களுக்கு அருகில் வந்த போது, மெய் தீர்த்தர் கூறுவது அவள் காதில் விழுந்தது.

"வாகைவேந்தனை பற்றி நான் கூறியதை மறந்து விட வேண்டாம்."

சரி என்று தலையசைத்த ஒப்பிலாசேயோன்,

"தாம் கூறியது போலவே செய்து விடுகிறோம் முனிவரே!" என்றார்.

அதை கேட்ட எழிலரசிக்கு, மகிழ்ச்சியாய் போனது. அவர் கூறிய வார்த்தை, தன்மயாவின் திட்டத்திற்கு அடித்தளமாய் அமையும்.

மெய்தீர்த்தர் அரண்மனையை விட்டு சென்ற பிறகு, தன் இருப்பிடம் நோக்கி நடந்தார் அரசர். அன்பிற்கினியாளை வழி மறித்த எழிலரசி, அவர் கையில் தான் கொண்டு வந்த குழலை, யாருக்கும் தெரியாமல் திணித்தாள்.  அவளை குழப்பத்துடன் ஏறிட்டார் அன்பிற்கினியாள். ஏனென்றால், அது போன்ற குழல்கள் தகவலை சுமந்து செல்லும் என்று அவருக்குத் தெரியும்.

"நான் இளவரசர் வாகைவேந்தரின் திருமணத்தைப் பற்றி தங்களிடம் பேச விரும்புகிறேன்." என்றாள் எழிலரசி.

அன்பிற்கினியாள் ஏதோ சொல்ல விழைந்த போது, எழிலரசி அவரைப் பேசவிடவில்லை.

"எனக்குத் தெரியும், தாம் அது பற்றி இந்த இடத்தில் பேச விரும்ப மாட்டீர்கள் என்று..." தங்களுக்கு அருகில் இருந்த ஒரு செடியை, கண்களால் அவரிடம் காட்டி பேசினாள் எழிலரசி.

அங்கு காஞ்சனமாலையின் அந்தரங்க தோழியான உமையாள் ஒளிந்து கொண்டிருப்பதை கவனித்தார் அன்பிற்கினியாள்.

"என் கேள்விக்கு தாம் பதில் கூறியாக வேண்டும். ஒரு இளவரசியாய் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது." என்று கூறியபடி அவர் கையில் கொடுத்த குழலை சுட்டிக்காட்டி அதை படிக்கும்படி சைகை செய்தாள்.

அவளது சைகையை புரிந்து கொண்ட அன்பிற்கினியாள்,

"சிறிது நேரம் கழித்து, நீ என் அறைக்கு வந்து, என்ன கேட்க வேண்டுமோ கேட்கலாம்." என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்தார்.

தன்னை உமையாள் பின்தொடர்ந்து வருகிறாள் என்பதை நிச்சயப்படுத்தி கொண்டாள் எழிலரசி. அவளது தோழிகள் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழிலரசியை பார்த்த தாமரை,

"அரசியாரை சந்தித்தாகி விட்டதா?" என்றாள்.

"சிறிது நேரம் கழித்து என்னை தன் அறைக்கு வருமாறு கூறியிருக்கிறார்."

"தன்மயா கூட அரசியாரை சந்திக்க வேண்டும் என்று கூறினாரே... தாம் அவரை அழைத்துச் செல்ல போவதில்லையா?"

"இல்லை, நான் வேண்டுமென்றே தான் அவரை தவிர்த்தேன்."

"தவிர்த்தீரா? எதற்காக?"

"ஏனென்றால் நான் அவரைப் பற்றி தானே என் தாயாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்..."

உமையாளுக்கு ஆர்வம் அதிகரித்தது.

"அவரைப் பற்றி பேசப் போகிறீர்களா?"

"ஆம்."

"அவரைப் பற்றி என்ன பேசப் போகிறீர்?"

"என் பெற்றோர் எதற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்."

"ஆனால், தமக்கும் தானே இந்த திருமணத்தில் சம்மதம்???"

"எனக்கு வேறு வழி இல்லை. ஏனென்றால், என்னால் என் அண்ணனின் ஆதரவை இழக்க முடியாது. அதனால் இதில் எனக்கு சம்மதம் என்பது போல் நான் பாசாங்கு செய்தேன். ஏனென்றால் ஒரு வேளை தன்மயா எனக்கு அண்ணியாய் வாய்த்து விட்டால், அவரை நான் இன்று எதிர்த்துவிட்டு பிறகு அவரோடு நட்புடன் பழக முடியாது. அதற்காக நான் அவரை ஏற்றுக் கொண்டேன் என்று அர்த்தம் அல்ல. நான் ஒரு இளவரசியாய் இருந்து கொண்டு ஒரு சாதாரண பெண்ணை எப்படி என் அண்ணியாய் ஏற்றுக் கொள்வது?"

அவள் பேயோ என்பது போல் அவளை பார்த்தார்கள் அந்த பெண்கள்.

"நான் வருகிறேன்." என்று அங்கிருந்து சென்றாள் எழிலரசி.

அவளை பின்தொடர்ந்த உமையாள் அரசியின் அறையை நோக்கி அவளுக்கு தெரியாமல் நகர்ந்து சென்றாள்.

இதற்கிடையில்...

தன்மயாவின் அறைக்கு வந்த அமுதன், கதவை தட்டினான். கதவை திறந்தது தன்மயா தான். ஏனென்றால் அங்கு தவ்வை இல்லை. எழிலரசி அனைவரையும் வெளியே அனுப்பி விட்டாள் அல்லவா...!

"எதற்காக என் அறையின் கதவை தட்டுகிறீர்கள்? நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என் அறைக்குள் இசைவின்றி நுழையலாம்."

"இசைவைப் பெறாமல் ஒரு பெண்ணின் அறைக்குள் நுழைவது கண்ணியம் அல்ல."

"அந்தப் பெண் தங்கள் மனைவியாக போகிறவள் தானே...!"

"அதனால்?"

"திருமணத்திற்கு பிறகு கூட எனது இசைவை பெற்று தான் உள்ளே வருவீர்களா?"

"திருமணத்திற்கு பிறகு அது உன் அறையாய் இராது... நமது அறையாய் மாறும். அதனால் உனது இசைவு எனக்கு தேவைபடாது"

"இளவரசர் வாகைவேந்தர் என் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை."

"நான் இங்கு இளவரசனாய் வரவில்லை."

"சரி, இங்கு எதற்காக வந்தீர்கள், அமுதே?"

"முன்பு நான் வந்த போது எதற்காக என்னை இங்கிருந்து அனுப்பினாய்? என்னை அனுப்பி விட்டு அந்த பெண்களிடம் அப்படி என்ன பேசினாய்? அவர்கள் இங்கிருந்து சென்றபோது அவர்களுடன் எழிலரசி இருக்கவில்லையே...?"

"இங்கே பாருங்கள் அமுதே! எனக்கு என் நாற்றனாருடன் பேசிக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கும். நான் அவற்றையெல்லாம் தங்களிடம் மனனம் செய்து கூறிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் பரிகாசமாய்.

"எல்லாவற்றையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முக்கியமானவற்றை கூறலாமே!"

"முக்கியமானதாய் இருந்தால் நானே தங்களிடம் கூறுவேன்."

பெருமூச்சு விட்ட அமுதன்,

"அப்படி என்றால் நீ என்னிடம் எதுவும் கூறப்போவதில்லையா?"

"இந்த முறை கூறப்போவதில்லை."

"ஏன்?"

"அது ரகசியம்."

"நமக்குள் எந்த ரகசியமும் இருப்பதை நான் விரும்பவில்லை."

"சரி, நான் தங்களிடம் கூறுகிறேன். நான் காஞ்சனமாலையை பற்றி அந்த பெண்களிடம் விசாரித்தேன்."

"அவளைப் பற்றி நீ என்ன கேட்டாய்?"

"நமது திருமணம் குறித்த அவளுடைய எதிர்வினை என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்."

"நீ எதற்காக அவளை பற்றி கவலைப்படுகிறாய்?"

"கவலைப்பட்டுத்தான் தீர வேண்டும். அவளது தந்தை இந்நாட்டின் நண்பர். அவர் உங்கள் மீது கோபம் கொண்டால், அவரது ஆதரவை தாம் இழக்க நேரிடும். அவர் இந்நாட்டின் மீது போர் தொடுக்கவும் வாய்ப்புள்ளது."

"நீ என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"

"நான் தங்களைப் பற்றி என்னென்னவோ நினைக்கிறேன். அவற்றையெல்லாம் நான் எப்படி தங்களிடம் கூறுவது?" என்று அவனை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

அமுதனின் கண்கள் அகலமாயின. அவன் சங்கடத்திற்கு ஆட்பட்டான்.

"சரி, நீங்கள் என்ன கூற வந்தீர்களோ அதை கூறுங்கள்." என்றாள் சிரித்தபடி.

"நம் நாட்டின் அடுத்த தளபதி யார் என்ற பேச்சு எழுந்த போது, அருகனின் பெயரை முன்மொழிந்தது நான் தான்."

"ஆம், அது எனக்கு தெரியும். அருகனும் அதை அறிவார்"

"ஆனால், எதற்காக அருகன் தளபதியாக வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று உங்கள் யாருக்கும் தெரியாது."

"அவர் திறமை மிக்கவர் என்பதால் விரும்பியிருப்பீர்."

"அவன் திறமையானவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நான் அவனை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது மட்டும் அல்ல."

"பிறகு?"

"நான் போர் புரிவதில்லை என்று உனக்கு வாக்களித்தேன். நினைவிருக்கிறதா?"

அதைக் கேட்ட தன்மயா அதிர்ந்தாள். அவன் இன்னும் அதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறானா?

"அமுதே! நான் கூறியது உண்மை தான். ஆனால், உங்கள் நாடு பகைவரால் சூழப்பட்டிருக்கும் பொழுது, தாம் அதை பின்பற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை."

"நான் கூற வந்ததை கூறி முடிக்கிறேன்."

"சரி, கூறுங்கள்."

"என் நாடு பகைவரால் சூழப்படும்போது நிச்சயம் நான் கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க மாட்டேன். ஆனால் அதே நேரம், நான் என் வார்த்தைகளை காப்பாற்றவும் நினைக்கிறேன். முன்பு போல் போர்க்குணத்தோடு போரை எதிர்பார்த்து காத்திருக்க நான் விரும்பவில்லை. ஆனால் அதே நேரம், எனது நாட்டை வலிமைப்படுத்த வேண்டியது என் கடமை. அதனால் என் நாட்டின் படையை எப்பொழுதும் தயாராய் வைத்திருக்க வேண்டிய துடிப்பு மிக்க தளபதி வேண்டும் என்று எண்ணினேன். எனது ஆணையை கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் ஒருவன் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று விரும்பினேன். அருகனை விட அதற்கு பொருத்தமானவர் வேறு ஒருவர் இருக்க மாட்டார் என்பது என் எண்ணம்."

"அதையே தான் நானும் கூறுகிறேன்..."

"நான் எழிலரசியை அருகனுக்கு திருமணம் முடிக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்." என்றான் யோசனையோடு.

தன்மயா குதூகலமானாள். மகிழ்ச்சியோடு அமுதனை ஏறிட்ட அவள்,

"தங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா?" என்றாள்.

ஆம் என்று தலையசைத்த அமுதன்,

"அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அருகன் இந்நாட்டின் மருமகன் ஆவான். அதன் பிறகு, இந்நாட்டை காக்க வேண்டிய சம பொறுப்பு அவனுக்கும் சென்று சேர்ந்து விடும்."

"என்ன ஒரு யோசனை...! தாம் மிகச்சிறந்த புத்திசாலி. ஆளும் பொறுப்பில் இருப்பவர் தங்களைப் போல் தான் இருக்க வேண்டும். உங்களுடைய இந்த முடிவை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் அவள்.

"அது சரி, நீ எதற்காக இவ்வளவு மகிழ்வோடு காணப்படுகிறாய்?"

சில நொடி திகைத்தாள் தன்மயா.

"ஒன்றுமில்லை. அருகனும் எழிலரசியும் மிகப் பொருத்தமாய் இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு அவளும் வேறு நாட்டிற்கு செல்லாமல் இங்கேயே, நம்முடனேயே இருந்து விடுவாள். அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயம் தானே!"

ஆம் என்று தலையசைத்தான்

"இது நல்ல யோசனை தான். ஆனாலும் இது எந்த அளவிற்கு பொருத்தமாய் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை."

"ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? அரசரும் அரசியாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?" என்றாள் பதற்றத்துடன்.

"நிச்சயம் இல்லை. அவர்களை நான் சுலபமாய் சம்மதிக்க வைத்து விடுவேன்."

"பிறகு எதைக் குறித்து ஆலோசனை?"

"எழிலரசி ஒரு தளபதியை மணந்து கொள்ள விரும்பாமல், இளவரசனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினால் என்ன செய்வது? என்னை அவள் தவறாக நினைத்துக் கொள்வாளோ என்று அச்சமாக உள்ளது."

"இல்லை இல்லை, அவள் நிச்சயம் தங்களை தவறாய் நினைக்க மாட்டாள். தாம் மேற்கொண்டு இது பற்றி தங்கள் பெற்றோரிடம் பேசலாம். அவள் நிச்சயம் ஒப்புக் கொள்வாள்." என்றாள் அவசரமாய்.

"நீ எப்படி இவ்வளவு நம்பிக்கையோடு கூறுகிறாய்?"

"எல்லாம் ஊகம் தான். ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணுக்கு தெரியாதா?"

ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.

"உங்களுடைய முடிவை நான் எழிலரசியிடம் கூறட்டுமா?" என்றாள் ஆவலுடன். அவளுடைய திருமணம் அருகனுடன் நிச்சயக்கப்பட இருக்கிறது என்பதை கூறும் பொழுது, அவள் முகம் எப்படி மலர்ச்சி அடைகிறது என்பதை காண வேண்டும் தன்மயாவுக்கு.

"நீ கூற போகிறாயா? ஏன்?" என்றான் முகத்தை சுருக்கி.

"ஒருவேளை அவள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நான் அவளை ஏற்றுக் கொள்ள செய்வேன்." என்று சமாளித்தாய் தன்மயா.

"உன்னால் முடியுமா?"

"ஏன் முடியாது? நிச்சயம் முடியும்."

"சரி, அப்படி என்றால் அவளிடம் நீயே கூறு."

தன்மயா அங்கிருந்து செல்ல நினைத்தபோது,

"தன்மயா..." என்று அவளை அழைத்தான் அமுதன்.

அவள் அவனை புன்னகையுடன் பார்க்க,

"எழிலரசி அருகனை விரும்புகிறாள் என்ற விடயம் உனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும்." என்றான் நமுட்டு புன்னகையுடன்.

தன்மயா மலைத்து நின்றாள்.

"எழிலரசி அருகனை விரும்புவது உங்களுக்கு தெரியுமா?" என்றாள் நம்ப முடியாமல்.

"ஒரு இளவரசனாய் இந்நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது என் பொறுப்பு. அப்படி இருக்கும் பொழுது, நான் என் தங்கையை கவனிக்காமலா விட்டு விடுவேன்?"

"அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தான் இந்த திருமணத்தை நிகழ்த்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?"

"அதற்காக மட்டுமல்ல... ஆனால் அதற்காகவும் தான்..."

தன்மயாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. அவனை நெருங்கி வந்து அவன் முகத்தை பற்றினாள். அமுதன் விழி விரித்தான்.

"நீங்கள் மிக மிக இனிமையானவர் அமுதே...!"

அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, இறுதியாய், தன் இதழ்களை அவன் இதழ்களின் மேல் அழுத்தமாய் ஒற்றி, அவனது ரத்த ஓட்டத்தை நிறுத்தினாள்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: LoveTruyen.Me