LoveTruyen.Me

Slug

54 கதையின் நாயகன்

தன்மயாவை அதிர்ச்சியோடு ஏறிட்டான் அமுதன். அவளும் அதே அதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அமுதனுக்கு தெளிவாய் ஒன்றும் புரியவில்லை என்றாலும், இளவரசன், சிற்றரசு, வாகைவேந்தன், சோழ நாடு, போன்ற வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தைகளை, தம்பிரான் ஏன் உச்சரித்தார் என்று அவனுக்கு புரியவில்லை.

"அவர் பேசிக் கொண்டிருப்பது என்னைப் பற்றியா?" என்றான்.

ஆம் என்று தலையசைத்தாள் தன்மயா.

"எனது தாத்தா தங்களை ஒரு முறை சந்தித்ததாய் அவர் கூறுகிறார்"

"என்ன்னன?" என்று முகம் சுருக்கினான் அமுதன்.

"தங்களுக்கு அந்த நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லையா?"

இல்லை என்று தலையசைத்தான் அமுதன். தன்மயாவுக்கு புரிந்து போனது, மணல் கடிகாரத்தை பயன்படுத்தி அவளது தாத்தா சோழ நாட்டிற்கு சென்றபோது, அவரும் அமுதனை சந்தித்திருக்கிறார். ஆனால் அமுதனுக்கு அது இப்பொழுது ஞாபகத்தில் இல்லை. அப்படி என்றால், மணல் கடிகாரத்தை பயன்படுத்தி கடந்த காலத்திற்கு செல்லும் ஒருவர், மீண்டும் திரும்பி நிகழ்காலத்திற்கு வந்துவிட்டால், கடந்த கால மனிதர்களுக்கு, நிகழ்கால மனிதர்களுடன் ஏற்படும் தொடர்பு அறுந்து போகிறது.

"ஏன் ருத்ரா அமைதியா இருக்க? சாகும் போது கூட நீ உண்மையை சொல்ல மாட்டியா? நீயும் குலோத்துங்கனும் டைம் டிராவல் பண்ண விஷயத்தை என்கிட்டயிருந்து மறைச்சிட்டீங்க. குலோத்துங்கன் செத்ததுக்கு பிறகு, நீ புத்திசாலித்தனமா ஃபாரினுக்கு ஓடிப் போயிட்ட. நீ திரும்பி வந்ததை என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா?"

ஒன்றும் கூறாமல் தம்பிரானை அமைதியாய் பார்த்தார் ருத்ரமூர்த்தி.

"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? உன்னை நான் இங்க எதுக்கு கொண்டு வந்தேன்? என்னை வெளிப்படுத்திக்கிட்ட பிறகு நான் உன்னை உயிரோட விட்டுடுவேன்னு நினச்சியா?"

"நீ இவ்வளவு மோசமானவனா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

"அது என்னோட தப்பு இல்ல நண்பா... என்னை நம்ப சொன்னது நான் இல்லையே..."

"என்னை நண்பன்னு கூப்பிடாத. அந்த வார்த்தைக்கு நீ தகுதி இல்லாதவன்"

"ஆமாம், அந்த தகுதி குலோத்துங்கனுக்கு  மட்டும் தான் இருக்கு... அப்படித்தானே?"

"ஆமாம், அவனுக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கு. ஏன்னா, அவன் உன்னை மாதிரி இல்ல"

"ஆமாம், அவன் உன்னை தானே தன் கூட டைம் ட்ராவல் பண்ணும்போது கூட்டிக்கிட்டு போனான்..." என்றார் தம்பிரான் நக்கலான சிரிப்புடன்.

ஆதித்தனும் அவரது மனைவி நந்தினியும்  ருத்ரமூர்த்தியை வியப்போடு பார்த்தார்கள்.

"எதுக்கு நீங்க ரெண்டு பேரும் அவனை அப்படி பாக்கறீங்க? அவனும் உங்க அப்பாவோட பல தடவை டைம் டிராவல் பண்ணி நிறைய வரலாற்று காலத்துக்கு போயிட்டு வந்தவன் தான். அப்போ தான் இவங்க ரெண்டு பேரும் இளவரசன் வாகைவேந்தனை சந்திச்சாங்க"

"அவர் சொல்றது உண்மையா, அங்கிள்?" என்றார் ஆதித்தன்.

"ஆமாம், குலோத்துங்கன் சோழ நாட்டுக்கு போன போது, அவங்களோட நட்பு நாடான ஒரு சிற்றரசோட இளவரசனை அவன் சந்திச்சான். இப்போ என்ன அதுக்கு?" என்றார் ருத்ரமூர்த்தி

"நீயும் அவன் கூட போன தானே?" என்றார் தம்பிரான். அதற்கு ருத்ரமூர்த்தி அமைதி காத்தார்.

"இதெல்லாம் என்ன, அங்கிள்?" என்றார் ஆதித்தன்.

"அது தான் குலோத்துங்கனுக்கு முதல் தடவை. அவனுக்கு அந்த சாண்ட் கிளாக் எப்படி கிடைச்சதுன்னு எனக்கு தெரியாது. அதைப்பத்தி அவன் என்கிட்ட எதுவும் சொல்லல. டைம் டிராவல் பண்றதுக்கு, நானும் குலோத்துங்கனை மாதிரியே ரொம்ப ஆர்வமா இருந்தேன். முதல்ல அவன் அதை யூஸ் பண்ணவே ரொம்ப தயங்கினான். ஏன்னா அதோட விளைவுகள் எப்படி இருக்குமோன்னு அவனுக்கு ஒரு பதற்றம் இருந்தது. நான் தான் அவனை என்கரேஜ் பண்ணேன். அதை செக் பண்ணி பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருந்தது. அப்போ தான் காவிரியை பத்தி பேசிக்கிட்டு இருக்கும் போது, கல்லனை கட்டுறதுக்கு முன்னாடி அது எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சிகிற ஆசை எங்களுக்கு ஏற்பட்டது. எங்க ரெண்டு பேருக்குமே சோழர்கள் மேல ஒரு தனி ஈடுபாடு. அதனால, யோசிக்காம அங்க போறதுன்னு முடிவெடுத்தோம். மணல் கடிகாரத்தை திருப்பிய அடுத்த நிமிஷம், நாங்க கல்லணை கட்டுறதுக்கு முன்னாடி இருந்த காவிரி கரையில இருந்தோம். அந்த இடத்தோட அழகுல நாங்க எங்க மனசை பறிகொடுத்தோம். அழகு இருக்கிற இடத்துல தான் ஆபத்தும் இருக்கும்னு சொல்லுவாங்க. அங்க ஒரு புலி வரும்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது எங்களை தாக்க வந்தது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு நின்னுகிட்டு இருந்தோம். நாங்க ரெண்டு பேரும் கையை ஒண்ணா சேர்த்தா தான், சாண்ட் கிளாக்கை திருப்பி அங்கிருந்து மறுபடியும் நிகழ்காலத்துக்கு வர முடியும். இல்லன்னா எங்கள்ல ஒருத்தர் கடந்த காலத்திலேயே தனிச்சி விடப்படுவோம். அதனால ஆளுக்கு ஒரு பக்கம் ஓட ஆரம்பிச்சோம். அந்த புலி குலத்துங்கனை விடாம துரத்துச்சு. எவ்வளவு நேரம் தான் ஒரு புலிக்கு அவனால ஈடு கொடுக்க முடியும்? அது அவன் மேல பாய வந்த போது, அங்க வந்த ஒரு வீரன், அதை தன் வாளால வெட்டி அவனை காப்பாத்தினான்"

அமுதனை யோசனையோடு ஏறிட்டாள் தன்மயா. அவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான். ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தி, *பிறகு கூறுகிறேன்* என்பது போல் கண்ணிமைத்தாள்.

"அப்புறம் என்ன ஆச்சு, அங்கிள்?" என்றார் ஆதித்தன்

"அங்க வந்த அந்த வீரன், எங்களோட டிரஸ் எல்லாம் வித்தியாசமா இருந்ததால எங்களை விசித்திரமா பார்த்தான். நாங்க அயல்நாட்டில் இருந்து வந்ததா அவன்கிட்ட பொய் சொல்லி எங்களை அறிமுகப்படுத்திகிட்டு, அவனோட ஃபிரெண்ட் ஆனோம். சோழ நாட்டைப் பத்தியும், திருமாவளவன் பத்தியும் அவன்கிட்டயிருந்து நாங்க நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டோம். எங்களை ரொம்ப அன்பா அவன் உபசரிச்சான். எங்களுக்கு அவனை ரொம்ப பிடிச்சிருந்தது. அவன் கூட நாங்க மூணு நாள் இருந்தோம். அவன் எங்களை காவிரிக்கு குளிக்க கூட்டிக்கிட்டு போனான். நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாதிரி, அங்க, அந்த வீரன் ஒரு விஷ அம்பால கொல்லப்பட்டான். காவிரிக்கு எதிர் கரையிலிருந்து அந்த அம்பை ஒருத்தன் அவன் மேல அடிச்சான். எங்களால அவனை காப்பாத்த முடியலையேன்னு எங்களுக்கு வருத்தம் தாங்கல"

மென்று விழுங்கியவாறு அமுதனை ஏறிட்டாள் தன்மயா. அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான் அமுதன், காவிரி, அம்பு என்ற வார்த்தைகள், அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள அவனுக்கு போதுமானதாய் இருந்தது.

"எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அப்போ பக்கத்துல இருந்த புதர்ல இருந்து சிலர் ஓடி வந்து அவனோட மூச்சை டெஸ்ட் பண்ணாங்க. அவங்க அழுததை வச்சு அந்த வீரன் இறந்துட்டான்னு நாங்க புரிஞ்சுகிட்டோம். அப்ப தான் எங்களுக்கு புரிஞ்சது, அவன் சாதாரண வீரன் இல்ல, அந்த சிற்றரசோட இளவரசன் வாகைவேந்தன்னு. அவனோட வீரர்கள் எப்பவும் அவனை சுத்தி இருந்துகிட்டே இருப்பாங்களாம். அவன் எங்க போனாலும் அவனை பின் தொடர்ந்து அவங்க வந்துகிட்டே இருப்பாங்களாம். அது அவனுக்கும் தெரியும். அதனால தான் எங்க மேல யாருக்கும் சந்தேகம் வரல"

"மனசு உடைஞ்சு நாங்க நிகழ்காலத்துக்கு திரும்பி வந்தோம். அப்ப தான் என் மகளுக்கு பையன் பிறந்தான். அவன் கையில வண்டு மாதிரி ஒரு மச்சம் இருந்ததை பார்த்த குலோத்துங்கன் ஆச்சரியப்பட்டான். ஏன்னா,  அதே மாதிரி ஒரு மச்சம் இளவரசன் வாகைவேந்தன் கையிலயும் இருந்தது. அதனால என் பேரனுக்கு வாகைவேந்தன்னு குலத்துங்கன் பேர் வச்சான்"

ஒன்றும் புரியாமல் நின்றிருந்த அமுதனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் தன்மயா

"அவர் என்ன கூறுகிறார்?" என்றான் அமுதன்.

"ஒரு வெளிநாட்டினரை தாம் எப்பொழுதாவது ஒரு புலியிடமிருந்து காத்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்களேன்" என்றாள்.

அவன் இல்லை என்று தலைசைத்தான்.

"என் வாழ்வில் நான் சந்தித்த ஒரே அயல்நாட்டு நபர் நீ மட்டும் தான்" என்று சிரித்தான்

"என்னை சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நீங்கள் ஒரு புலியை கொன்றீர்களா?" என்றாள்.

யோசிக்காமல் ஆம் என்று தலையசைத்தான் அமுதன்.

"என் மீது பாய வந்த புலியை நான் கொன்றேன். அதைப்பற்றி உனக்கு எப்படி தெரிந்தது? இப்போது நீ ஏன் அதைப் பற்றி கேட்கிறாய்?"

"நாம் அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். முதலில் நாம் அவர்களை காப்பாற்ற வேண்டும்"

"அப்படி என்றால் நான் செல்லட்டுமா?"

"ஆம்"

"நீ இங்கேயே இரு. தேவைப்படாதவரை இங்கிருந்து வெளியில் வராதே" என்ற அமுதன், தனது வாளை உருவினான்.

"நீ சொன்ன கதை ரொம்ப நல்லா இருந்துது, ருத்ரா. அப்படியே, இப்போ அந்த சாண்ட் கிளாக் எங்க இருக்குன்னு சொல்லிடு..." என்றார் தம்பிரான்.

"இங்க பாரு, நான் குலோத்துங்கனோட சோழநாட்டுக்கு மட்டும் தான் போனேன். அதுக்கப்புறம் அவன் எங்க போனான், அதை எப்படி யூஸ் பண்ணினான், எதுவுமே எனக்கு தெரியாது. நான் சொல்றதை நம்பு"

"உன்கிட்ட பேசிகிட்டு இருக்கிறது வேண்டாத வேலைன்னு நினைக்கிறேன்" என்று தன் பாக்கெட்டில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தார் தம்பிரான்.

அப்பொழுது, அரச உடை அணிந்து, கையில் வாளுடன் ஒருவன் உள்ளே நுழைவதை பார்த்த அவர்கள் முகத்தை சுருக்கினார்கள். ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும் அதிர்ச்சியும், ஆச்சரியமும், அடைந்தார். அது வாகைவேந்தனை நன்கு அறிந்த ருத்ரமூர்த்தி தான்.

"இளவரசர் வாகைவேந்தரா...?" என்று அதிர்ச்சியோடு அவர் கூற, அனைவரும் அவரை அதிர்ச்சியோடு ஏறிட்டார்கள்.

விஷஅம்பு பட்டு தன் கண் முன்னால் சரிந்து விழுந்து உயிர்விட்ட இளவரசன் வாகைவேந்தன் தனக்கு முன்னாள் உயிருடன் வந்து நிற்பதை அவரால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? மாடர்ன் உலகத்திற்கு அவர் எப்படி வந்தார்? இங்கு என்ன நிகழ்கிறது?

அமுதனை நோக்கி தன் துப்பாக்கியை திருப்பினார் தம்பிரான். அனாயாசமாய் தன் வாளை சுழற்றினான் அமுதன். துப்பாக்கியை பற்றியிருந்த தம்பிரானின் கரம் துண்டிக்கப்பட்டு தனியே சென்று விழுந்தது. தாங்க முடியாத வலியால், கீழே விழுந்து அவர் கதறி துடித்தார். அவர்களை சுற்றி இருந்த அடியாட்கள் தங்களை சுதாகரித்துக்கொள்ளும் முன், அவர்களுள் நால்வர் தங்கள் உயிரை அமுதனின் வாளுக்கு இரையாக தந்தார்கள். மீதம் இருந்த நால்வர் தங்களிடமிருந்த கத்திகளை வெளியில் எடுத்தார்கள். அவை அமுதனின் வாளின் அளவில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. கத்திகளை கையில் பிடித்தவாறு அவர்கள் அமுதனை சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது.

"அவனை கொல்லுங்க டா" என்று கத்தினார் தம்பிரான் தாளாத வலியுடன்.

அந்த அடியாட்கள், தங்கள் கண்களை தம்பிரானின் பக்கம் திருப்பினார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு அமுதனுக்கு அந்த கண நேரம் போதுமானதாய் இருந்தது. கூப்பாடு போட்டபடி தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள் அவர்கள்.

கீழே விழுந்து  அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தம்பிரானை பார்த்த அமுதன், ஒரு நொடியும் யோசிக்காமல், தனது வாளை அவர் நெஞ்சில் பாய்ச்சினான். தன் முன்னாள் நிற்கும் மனிதன் தான், சற்று நேரத்திற்கு முன்பு ருத்ரமூர்த்தி கூறிய சுவாரசியமான கதையின் நாயகன் என்ற உண்மையை அறியாமலேயே உயிரை விட்டார் தம்பிரான்.

தன்மயாவின் பெற்றோர்களையும் ருத்ரமூர்த்தியையும் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டான் அமுதன்.

"இளவரசர் வாகைவேந்தரே! தாம் இங்கு எப்படி வந்தீர்?" என்றார் ருத்ரமூர்த்தி.

அவர் கூறியதை கேட்டு, ஆதித்தனும், நந்தினியும் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டார்கள். அப்பொழுது அந்த மாளிகைக்குள் நுழைந்த தன்மயாவின் பக்கம் அவர்கள் பார்வை திரும்பியது. அவளை அந்த இடத்தில் பார்த்த ஆதித்தனும் நந்தினியும் வியப்படைந்தார்கள்.

"தனு, நீ உன்னோட காலேஜ் டூருக்கு தானே போயிருந்த? அப்படி இருக்கும் போது நீ எப்படி இங்க வந்த?" என்றார் நந்தினி.

"அம்மா, நான் காலேஜ் டூர்லயிருந்து வரல. நான் சோழ நாட்டிலிருந்து வரேன்" என்றாள்.

ஆதித்தனும் நந்தினியும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அந்த அதிர்ச்சி ருத்ரமூர்த்திக்கு ஏற்படவில்லை.

"ஆமாம் மா, நான் தாத்தாவோட சாண்ட் கிளாக்கை யூஸ் பண்ணி தான் அங்க போயிருந்தேன். உண்மையிலேயே நடந்தது என்னன்னா, தம்பிரான் இன்னைக்கு உங்களை கொன்னுட்டாரு"

"நீ என்ன சொல்ற, தனு?"

"ஆமாம் மா. அதுக்கப்புறம் நான் ஒரு எக்ஸ்ப்ளோரர் ஆயிட்டேன். அப்போ தான் சாண்ட் கிளாக்குக்காக சில பேர் என்னை துரத்தினாங்க. அவங்க யாருன்னு எனக்கு தெரியாது. அவங்க ருத்ரமூர்த்தியோட ஆளுங்கன்னு தம்பிரான் சொன்னாரு"

"சுத்த பொய்" என்று பல்லை கடித்தார் ருத்ரமூர்த்தி.

"நம்ம வீட்டுக்கு போய் நான் அந்த சாண்ட் கிளாக்கை தேடினேன். அது என்னோட டெடி பியர் பொம்மைக்குள்ள இருந்துது. அது எனக்கு கிடைச்சிட்ட விஷயத்தை நான் தம்பிரான்கிட்ட சொல்லல. அதை அவர்கிட்ட நேர்ல போய் கொடுக்கணும்னு நெனச்சேன். நான் அவர் வீட்டுக்கு போனபோது, என்னை துரத்திகிட்டு வந்த ஒருத்தன் அவர் வீட்டுகிட்ட நின்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தான். அதை பார்த்து, அதை அவர்கிட்ட கொடுக்காம திரும்பி வந்துட்டேன். அதை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல கொடுத்திடலாம்னு நெனச்சேன். நான் அங்க போனபோது ருத்ரமூர்த்தியோட பேரன், அங்க இருந்த ஆஃபீஸர் கிட்ட என்னைப்பத்தி ஃபோன்ல விசாரிச்சுக்கிட்டு இருந்தான். அதனால என் மனசை மாத்திக்கிட்டு அங்கிருந்து வெளிய வந்தேன். அப்போ சில அடியாளுங்க என்னை சுத்து போட்டுட்டாங்க. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக சாண்ட் கிளாக்கை ட்விஸ்ட் பண்ணி, நான் சோழ நாட்டுக்கு போயிட்டேன்."

"உன்னைப் பத்தியும், ஸ்டாண்ட் கிளாக் பத்தியும் நான் என் பேரன்கிட்ட சொல்லி இருந்தேன். உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் அவன் உன்னை பத்தி விசாரிச்சிருப்பான்" என்றார் ருத்ரமூர்த்தி.

"ஓ... இப்போ நான் உங்களை காப்பாத்த தான் சோழ நாட்டிலிருந்து இவரோட வந்தேன் மா" என்றாள் அமுதனை காட்டி.

அமுதனை பார்த்த ஆதித்தனும் நந்தினியும் இரு கரம் கூப்பி அவனை வணங்கினார்கள். தன் தலையசைத்து அதை ஏற்றான் அமுதன்.

"உங்க தாத்தா மட்டும் உயிரோட இருந்திருந்தா,  நீ வாகைவேந்தரோட ஃபிரண்டா இருக்கிறதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பான்" என்றார் ருத்ரமூர்த்தி.

தன்மயாவின் அடுத்த வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

"அவர் என்னோட ஃபிரண்டு இல்ல. என்னோட புருஷன்..." என்றாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: LoveTruyen.Me